திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜீயபுரம் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்ணு (24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்த நிலையில் நேற்று முன்தினம் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இவர் கொடியாலம் பகுதியில் இருந்து சத்திரம் நோக்கி அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்த நிலையில் பைக்கில் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தனர். இவர்களில் ஒருவர் மட்டும் பேருந்தில் ஏறிய நிலையில் அவர் விஷ்ணுவை கீழே தள்ளிவிட்டார். கீழே விழுந்த அவரை ஐந்து பேரும் சேர்ந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

சினிமா பாணியில் நொடிப் பொழுதில் அரங்கேறிய கொலை சம்பவத்தை பார்த்ததும் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடிய நிலையில் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் கோகுல் என்பவரின் கொலை வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.  அவர் சமீபத்தில் தான் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்ததும் தெரிய வந்தது. இதன் காரணமாக முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.