சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள நான்சியா கிராமத்தில், ஒரு மலைப்பாம்பு மீட்பு நடவடிக்கையுடன், அதனுடன் இருந்த 21 முட்டைகளிலிருந்து பாம்பு குட்டிகள் வெளியே வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 27-ம் தேதி காலை, நான்சியா கிராமத்தில் ஒரு பெரிய மலைப்பாம்பு காணப்பட்டதாக ராய்கர் விலங்கு சேவை சமிதிக்கு தகவல் வந்தது. தர்மேந்திர சிங் ராஜ்புத் தலைமையிலான குழுவினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று, ஒரு வீட்டின் வைக்கோலுக்குள் 12 அடி நீளமும், 25 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பு மறைந்திருப்பதை கண்டனர்.

ஆபத்தான சூழ்நிலையிலும் துணிச்சலுடன் செயல்பட்ட குழுவினர், பாம்பை பாதுகாப்பாக மீட்டு அருகிலுள்ள ஆற்றில் விட்டனர். இந்த மீட்பு பணியின் போது, அந்த இடத்தில் மொத்தம் 21 பாம்பு முட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை உடனே பாதுகாப்பாக சேமிக்கப்பட்டு, குழுவினரின் பராமரிப்பில் வைக்கப்பட்டன. சில நாட்களுக்குள் அந்த முட்டைகளிலிருந்து குட்டிகள் வெளியே வந்தது மிகப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது, இந்த குட்டி மலைப்பாம்புகள் அனைத்தும் காட்டில் விடப்பட்டுள்ளன. இந்த செயல்பாடுகள் மூலம் ராய்கர் விலங்கு சேவை குழுவினர் காட்டுயிர் பாதுகாப்பில் தங்களது முக்கிய பங்களிப்பை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சேவைகள் பரப்பாக பாராட்டப்பட வேண்டியவை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.