
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் (வயது 82) புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் சிறுநீரக தொற்று தொடர்பான பிரச்சினையால் மருத்துவ ஆலோசனைக்குச் சென்ற பைடனுக்கு, பரிசோதனையின் போது இந்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையின்படி, புற்றுநோய் தற்போது அவரது எலும்புகளுக்கும் பரவியுள்ளது.
பைடனின் நிலைமையை மதிப்பீடு செய்த மருத்துவர்கள், க்ளீசன் மதிப்பெண் 9 (கிரேடு குரூப் 5) என சுட்டிக்காட்டியுள்ளனர். இது நோயின் தீவிரத்தைக் குறிக்கும். மேலும், இது ஹார்மோன்களுக்கு செவிமடங்கிய புற்றுநோயாக இருப்பதாலும், சிகிச்சையை சிறப்பாக நிர்வகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பைடனின் குடும்பத்தினர் தற்போது மருத்துவர்களுடன் கலந்தாலோசனை செய்து சிகிச்சை தேர்வுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
2023 ஆம் ஆண்டில் பைடனுக்கு தோலில் பாசல் செல்க் கார்சினோமா எனும் தோல் புற்றுநோய் கண்டறியப்பட்டிருந்தது. அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியதாக வெள்ளை மாளிகை மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போதைய உடல்நிலை மற்றும் வயது காரணமாக, பைடன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும் அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின்படி, புரோஸ்டேட் புற்றுநோய் ஆண்களில் இரண்டாவது பெரிய உயிரிழப்பு காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.