
டெல்லியில் துஷார் சிங் பிஷ்ட் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயது ஆகும் நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் இந்த நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நிலையில் டேட்டிங் செயலிகள் மூலமாக இளம்பெண்களை மோசடி செய்து பணம் பறித்துள்ளார். இவர் ஆன்லைனில் போலியாக பல அக்கவுண்ட் திறந்துள்ளார்.
பின்னர் 18 முதல் 30 வயதான பெண்களை குறி வைத்து சேட்டிங் செய்வார். அந்த பெண்களிடம் தான் ஒரு அமெரிக்க மாடல் என்றும் திருமணம் செய்து கொள்ள பெண் தேடி இந்தியாவிற்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதை நம்பி அவருடைய ஆசை வலையில் பல பெண்கள் விழுந்த நிலையில் அவர்களை முதலில் நம்ப வைத்து பேசினார். பின்னர் அவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் கேட்க சில பெண்கள் கொடுத்துவிட்டனர். பின்னர் அந்த பெண்களிடம் வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி அவர் பணம் பறித்துள்ளார்.
இதனை பல பெண்கள் மறைத்த நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி ஒருவர் இவரால் பாதிக்கப்பட்ட நிலையில் தைரியமாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரின் இருப்பிடத்தை அறிந்து அவரை கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கிட்டத்தட்ட 700 பெண்களை அவர் மோசடி செய்தது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து கிரெடிட் கார்டுகள் மற்றும் செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.