ரஷ்யா – உக்ரைன் போர் தொடரும் நிலையில், அமெரிக்கா அளித்து வந்த முக்கிய ஆயுத உதவிகளை நிறுத்தும் முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாக அமையலாம் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2022ல் ரஷ்யா உக்ரைன் மீது போரை துவக்கியதிலிருந்து, அமெரிக்கா அதிகளவில் ராணுவ மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வந்தது. அதிபர் பைடன் தலைமையிலான ஆட்சி, பல ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அனுப்பியிருந்தது.

இந்நிலையில், புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதையடுத்து, இந்த ஆயுத சப்ளைகள் தொடர்பாக அமெரிக்க அரசில் உள்ள சிலர் எதிர்மறை கருத்துகளைத் தெரிவிக்கத் தொடங்கினர். அமெரிக்க பாதுகாப்புத் துறை, பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்படும் ராணுவ ஆதரவுகளை மீளாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டது.

இதில், பென்டகன் தலைமையகத்திலேயே சில முக்கியமான ஆயுதங்களின் இருப்பு குறைவாக இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே, உக்ரைனுக்கு அனுப்பப்படும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயுத உதவிகளை, தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பென்டகன் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது, “அமெரிக்கா தேசிய பாதுகாப்பை முன்னிட்டே இத்தகைய முடிவை எடுத்துள்ளது. உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்த பின்னரே வெளிநாட்டு உதவிகள் குறித்து முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளது. ஆனால், உக்ரைனுக்கு இது கடுமையான பின்னடைவை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக, அண்மையில் ரஷ்யா மேற்கொண்ட கடுமையான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க இருந்த நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவு, உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக சவாலாக அமைந்துள்ளது.

இந்த நிலையில்தான் உக்ரைன் தரப்பில் இருந்து, “நெருக்கடியான தருணத்தில் உறவுநாடுகளின் ஆதரவு தேவை” என்கின்ற வலியுறுத்தல்கள் வந்துவந்தாலும், அமெரிக்கா பாதுகாப்பு காரணங்களைக் காட்டி உதவிகளை கட்டுப்படுத்தியுள்ளது. தற்போது உலக நாடுகள், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை கவனத்துடன் பார்க்கின்றன.

இது, எதிர்காலத்தில் உள்நாட்டு பாதுகாப்பும், சர்வதேச உறவுகளும் எந்த பாதையில் நகரும் என்பதை தீர்மானிக்கக் கூடும் என வட்டாரங்கள் கருதுகின்றன.