உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தந்தை மற்றும் மகன் இருவரும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லைக் அகமது எனும் வயதான நபர், உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் உறுதியானதும், டாக்டர்கள் மரண அறிவிப்பை அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தனர்.

தந்தையின் மீது மிகுந்த அன்பு கொண்ட மகன் அதிக், இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாமல் வேறு ஒரு இதய சிறப்பு மருத்துவமனைக்கு தந்தையை அழைத்துச் சென்றார். அங்கும் மருத்துவர்கள் மரணத்தை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து தந்தையின் உடலை ஆம்புலன்ஸில் வீட்டுக்குக் கொண்டு செல்லும் போது, பின்வந்து கொண்டிருந்த அதிக் திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், மருத்துவர்கள் அவரும் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

தந்தை மற்றும் மகன் இருவரும் ஒரே நாளில் உயிரிழந்த நிலையில், இருவரின் இறுதிச்சடங்குகளும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. அதிக் தனது குடும்பத்தில் தந்தையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பார். இந்த சோக சம்பவம் குடும்பத்தினரும், கிராமவாசிகளிடமும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.