தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நத்தமேடு கிராமத்தில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலி(24) என்ற மகள் உள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சலி அதே பகுதியை சேர்ந்த தங்கமணி(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். தற்போது தங்கமணி ரயில்வே ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அஞ்சலி தனது தந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அஞ்சலியை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அஞ்சலி கூறியதாவது, நானும் தங்கமணியும் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்தோம். இதனால் எனது பெற்றோர் எந்த சீர்வரிசையில் செய்யவில்லை. இந்த நிலையில் எனது கணவரும் ,அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்கின்றனர். அவர்கள் என்னையும் எனது குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தியதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது கணவர், அவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஞ்சலி கூறியுள்ளார். இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.