
தர்மபுரி மாவட்டம் முத்தம்பள்ளியை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதியினருக்கு 7 வயதில் பெண் குழந்தையும், பிறந்து 9 மாத தரணிஷ் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். ராஜதுரை கோயம்புத்தூரில் வேலை பார்ப்பதால் சேலத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேருந்தில் சென்றுள்ளார்.
இந்த நிலையில் பேருந்து சங்ககிரி அருகே சென்றபோது டிரைவர் பிரேக் பிடித்ததாக தெரிகிறது. இதனால் ராஜதுரை நிலை தடுமாறியதால் அவரது தோளில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை நழுவி பேருந்தின் முன்பக்க கதவு வழியாக சாலையில் விழுந்தது.
இதனால் தம்பதியினர் அலறி சத்தம் போட்டதும் டிரைவர் பேருந்தை நிறுத்திவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.