
உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கடும் வெப்பத்தால் மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் பகலிலும் இரவிலும் குறையாமல் இருப்பதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனுடன், மாநிலத்தின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டும் ஏற்பட்டு வருகிறது. நொய்டா, காசியாபாத், லக்னோ போன்ற பெருநகரங்களிலும் இரவில் 8 முதல் 10 முறை வரை மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.
இந்நிலையில் மின்வெட்டால் அவதிப்பட்ட ஜான்சியைச் சேர்ந்த ஒரு குடும்பம், இரவில் தூங்குவதற்காக ஒரு ஏடிஎம்மில் தஞ்சம் புகுந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பண்டேல்கண்ட் பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள மத்திய வங்கியின் ஏடிஎம்மில், அந்தக் குடும்பம் பாய்கள் விரித்து தூங்கும் காட்சி பதிவாகியுள்ளது. ஏடிஎம்மில் ஏசி இயங்கியதால், தங்களது வீட்டைவிட இங்கு நிம்மதியாக தூங்கலாம் என எண்ணியதால் அந்த குடும்பம் இவ்வாறு முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.
In UP’s Jhansi, locals struggling with massive power cuts for the past month have now sought refuge at an ATM. pic.twitter.com/hszYyc67pN
— Piyush Rai (@Benarasiyaa) May 20, 2025
இந்த வீடியோவை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அதில், “மின்வெட்டால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள், மின்சாரம் உள்ள ஏடிஎம்களில் தஞ்சம் புகுகிறார்கள். ஆனால் உத்தரப்பிரதேச மின்சாரத் துறை என்ன செய்கிறது?” எனக் கேள்வி எழுப்பி, மின்சாரத் துறையை கடுமையாக விமர்சித்துள்ளார். மறுபுறம், ஜான்சி மின்சார விநியோக வாரிய அதிகாரி முகமது சாகிர், வெப்பத்தால் மின்சார நுகர்வு அதிகரித்திருப்பதாகவும், பழுதுகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன என்றும் விளக்கமளித்துள்ளார்.