தமிழக அரசு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இன்று காலை சென்னை மெட்ரோ ரயில்வே நிலையம் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 13,000 வரையில் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் தற்போது சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு சர்க்கரைத் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளது.

இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி ஒதுக்கீடு உபரி உள்ள சுப்பிரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இரு கூட்டுறவு ஆலைகளுக்கும் 8.33 சதவீதம் மிகை ஊதியமாகவும் 11.67% கருணைத்தெகையாகவும் வழங்கப்படும். இவர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும். இதேபோன்று மீதமுள்ள 14 கூட்டுறவு ஆலைகள் மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு 8.33% மிகை ஊதியம், 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் வழங்கப்பட உள்ளது. மேலும் இதன் மூலம் மொத்தம் 5775 ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.