
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் கருவறைக்கு முன்பாக இருக்கும் அர்த்த மண்டபத்திற்குள் நுழையம் முயன்றார். ஆனால் அவரை கோவில் பூசாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையாக மாறிய நிலையில் இது தொடர்பாக கோவில் நிர்வாகம் அளித்த விளக்கத்தில் அர்த்த மண்டபமும் கருவறை போன்றது தான். அதற்குள் நுழைவதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இளையராஜா தவறுதலாக அந்த மண்டபத்திற்குள் நுழைய முயன்றதால் அவரை கோவில் நிர்வாகம் தடுத்து நிறுத்தி விவரத்தை சொன்னது.
அதைக் கேட்டதும் இளையராஜாவும் அங்கிருந்து வெளியே வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றார் என்று கூறினார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக தற்போது இளையராஜா ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார். அதில், என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் கிடையாது. விட்டுக் கொடுக்கவும் இல்லை. நடக்காத ஒரு செய்தியை நடந்ததாக கூறுகிறார்கள். மேலும் இந்த வதந்தியை பொதுமக்களும் ரசிகர்களும் நம்ப வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.
என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 16, 2024