நொய்டாவில் ஜிஎஸ்டி துணை ஆணையர் சஞ்சய் சிங் தனது அடுக்குமாடி குடியிருப்பின் 15-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஷியாபாத் ஜிஎஸ்டி துறையில் பணியாற்றிய சஞ்சய் சிங் காலை 11 மணியளவில் தனது குடியிருப்பிலிருந்து குதித்ததாக கூறப்படுகிறது. அவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். அவரின் மூத்த மகன் குருகிராமில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.

இந்த நிலையில் சஞ்சய் சிங் கடந்த ஐந்து ஆண்டுகளாக புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் சஞ்சய் சிங் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. காஷியாபாத் ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் எம்.பி. சிங், சஞ்சய் சிங் நோயின் இறுதி நிலையில் இருந்ததாகவும், இதன் காரணமாக கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளார். சஞ்சய் சிங்காஷியாபாத் செக்டர் 2 இல் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் பணியாற்றி வந்ததோடு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளை கவனித்து வந்துள்ளார். அவரது இறப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.