
நடிகர் தளபதி விஜய், இன்று தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார். மேலும் அரசியல் கட்சியையும் தொடங்கியுள்ளார். அவர் தற்போது முன்னணி நட்சத்திரமாக இருந்தாலும் அவருடைய திரையுலக பயணம் எளிதாக இருக்கவில்லை. பிரபல இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகனாக இருந்தபோதும், அவரது திரைதுறைக்கான ஆர்வத்துக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தவரே அவரது தந்தை தான். ஆனால், விஜயின் தீர்மானத்தையும், அவரது திறமையையும் உணர்ந்து தனது கருத்தை மாற்றியமைக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கியக் காரணமாக இருந்ததாக விஜய் கூறினார். தற்போது, திரையுலகில் தனது சுய அடையாளத்தை உருவாக்கியுள்ளார் விஜய்.
முன்னதாக 2010-ஆம் ஆண்டு இயக்குநர்கள் சங்க நிகழ்ச்சியில், விஜய் தனது திரைபயணத்தின் தொடக்கக் கதையை பகிர்ந்துள்ளார். அதில், “பத்தாம் வகுப்பு முடிந்ததும், படிப்பில் கஷ்டப்பட்டதால் திரையுலகில் சேர விரும்புவதாக தந்தையிடம் தெரிவித்ததாகவும். ஆனால், அவரது தந்தை இதனை ஏற்க மறுத்ததாகவும், அதற்கு பின்னால் பெரும் போராட்டம் நடந்ததாகவும் தெரிவித்தார். மேலும் அண்ணாமலை படத்தில், நண்பனாக இருந்து எதிரியாக மாறும் கதாபாத்திரத்திற்கு எதிராக ரஜினி சார் சவால் விடும் பிரபலமான வசனம் ஒன்றை நான் பேசினேன். அதை வீடியோவாக எடுத்துக் கொண்டு என் அப்பாவிடம் காட்டினேன். அதை பார்த்த பிறகு தான், அவர் ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் என்னை அறிமுகம் செய்ய முடிவு செய்தார் என்று கூறியுள்ளார்.