
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆளூர் அருகே கட்டிலில் வைக்கப்பட்டிருந்த செல்போன் வெடித்து தலையணை மற்றும் மெத்தை தீப்பிடித்து எரிந்தது. அதிலிருந்து ஏற்பட்ட புகையால் மது போதையில் தூங்கிக் கொண்டிருந்த சதீஷ் என்பவர் மூச்சு திணறி உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் தொழிலாளர்கள் இரண்டு பேருடன் ஆளூர் பகுதியில் தங்கி பெயிண்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். தூக்கத்தில் சதீஷ் செல்போனை தனது தலையணைக்கு அருகே வைத்துள்ளார்.
காலை நீண்ட நேரம் ஆகியும் சதீஷ் வெளியே வராததால் அவருடன் சென்ற வெங்கடேஷ் என்பவர் அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கீழே இறந்த நிலையில் சதீஷ் கிடந்துள்ளார். மேலும் கட்டில், மெத்தை தலையணை ஆகியவை எரிந்த நிலையில் இருந்தது. அப்போதுதான் சதீஷின் செல்போன் வெடித்து சிதறியது தெரியவந்தது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதீஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.