அஜ்மீர் நகரின் ஆஷாகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள ஜூலேலால் கோயிலில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 62 வயதான பக்தர் மன்னு பாய், வழக்கம்போல் கோயிலுக்கு வந்து பூஜையில் கலந்து கொண்டபோது திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இறைவனின் சிலையின் முன்பே உயிரிழந்தார்.

இந்த நிகழ்வு கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மன்னு பாய், கடந்த பல ஆண்டுகளாக ஜூலேலால் கோயிலில் பக்தியுடன் சேவை செய்து வந்தவர்.

கோயிலில் நடைபெறும் பூஜைகள், அர்ச்சனை, அலங்காரம் மற்றும் சமையல் சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டார். இயற்கை மூலிகைகளின் அடிப்படையில் மஞ்சள் காமாலை மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மன்னு பாய் மீது பக்தர்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது.

மார்ச் 30ஆம் தேதி ஜூலேலால் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பூஜை வழிபாட்டின் போது மன்னு பாய் திடீரென மயங்கி இறைவனின் பாதங்களில் விழுந்தார். கோயிலில் இருந்த பக்தர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.