
அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழகத்துக்கு 8 முறை வந்து பிரச்சாரம் செய்த நிலையில் மத்திய அமைச்சர்களும் பிரச்சாரம் செய்தனர். அதேபோன்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். காங்கரஸ் சார்பில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். ஆனால் தமிழகத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக நான் ஒருவன் மட்டும் தான் தனியாக நின்று பிரச்சாரம் செய்தேன்.
கூட்டணியில் இருக்கும் தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உட்பட தலைவர்கள் மற்ற தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு. வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி நிச்சயம் கிடையாது. அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். மேலும் தமிழகத்தில் 2026 இல் அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார்.