2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான் அரசாங்கத்தை இதுவரை எந்த நாடும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காத நிலையில், முதல் முறையாக ரஷியா அங்கீகாரம் அளித்துள்ளது. இது சர்வதேச அளவில் முக்கிய அரசியல் மாற்றம் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்த நடவடிக்கையின் கீழ், ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ, தாலிபான் நியமித்த ஆப்கான் தூதராக குல் ஹசன் ஹாசனுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகார ஆவணங்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து, மாஸ்கோவில் உள்ள ஆப்கான் தூதரகத்தில், முந்தைய அரசாங்கத்தின் கொடி அகற்றப்பட்டு தாலிபானின் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது. இது, இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளில் புதிய பரிமாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இரு நாடுகளுக்கும் இடையில் பல துறைகளில் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு வளரும்” என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி, “இது எங்களது இருதரப்பு உறவுகளின் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி” என மகிழ்ச்சி தெரிவித்தார்.

அந்நிய ஆட்சியாளர்களை விரட்டிய பிறகு ஆட்சியை பிடித்த தாலிபான், மனித உரிமைகள், பெண்கள் கல்வி, ஜனநாயக நடைமுறைகள் போன்றவற்றை பின்பற்றவில்லை என விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பல நாடுகள் அவர்களது ஆட்சியை அங்கீகரிக்காமல் விட்டுள்ளன. ஆனால் இந்நிலையில் ரஷியாவின் இந்த அங்கீகாரம், உலக நாடுகளில் புதிய எதிர்வினைகளை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தற்போது, மற்ற நாடுகள் இதைத் தொடர்ந்து தாலிபான் அரசுக்கு அங்கீகாரம் வழங்குமா? அல்லது ரஷியாவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதா என்பது வருங்கால அரசியல் சூழல்களை தீர்மானிக்கப்போகிறது.