
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை பொதுமக்கள் நேரடியாக பார்க்கும் வகையில், கோவை மாநகராட்சி சார்பாக நகரின் முக்கியமான இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, காந்திபுரம் பேருந்து நிலையம், ரேஸ்கோர்ஸ் மற்றும் பல்வேறு நகராட்சிகள், பேரூராட்சிகளில், இந்த ஒளிபரப்பு நடைபெற்று வருகிறது. ஆனால், கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு எல்.இ.டி திரையில், தமிழ்நாடு பட்ஜெட்டின் பகுதி ஒளிபரப்பாகாமல், நாம்தமிழர் கட்சி தலைவர் சீமானின் ஆங்கில செய்தியாளர் சந்திப்பு ஒளிபரப்பாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள், தமிழ்நாடு பட்ஜெட்டை காணத்தான் திரைக்கு முன்பு திரண்டிருந்த நிலையில், சீமானின் ஆங்கில உரை ஒளிபரப்பானது அவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இது தற்செயலாக நிகழ்ந்த தவறா அல்லது திட்டமிட்ட பிழையா என்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் இந்த விவகாரத்தை கிண்டலாகவும், ஆச்சரியத்துடன் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.