
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகம் கொலை நகரமாக மாறியுள்ள நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். சாராய விற்பனையை தாண்டி கஞ்சா மற்றும் போதைப்பொருள் உள்ளிட்டவைகள் விற்கப்படுகிறது. குறிப்பாக வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் அருகேயும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. சாலையில் ஒருவரை வெட்டி கொலை செய்வதோடு போலீஸ்காரரையே எரித்து கொலை செய்துள்ளனர். இதுவரையில் கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
திமுக கட்சியின் கொடி கட்டிய காரில் இருந்து இறங்கி வந்து பெண்களிடம் தகராறு செய்கிறார்கள். தமிழகத்தில் ஆயிரம் கோடி டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ள நிலையில் அதற்கு எதிராக அண்ணாமலை ஏன் போராடுகிறார். பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கும் நிலையில் அண்ணாமலைக்கு போராட அதிகாரம் இல்லை. அந்த டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக நான் தான் போராட வேண்டும். 450 கோடி கழிவறை ஊழல் நடந்த நிலையில் அது பற்றி யாருமே பேசவில்லை. திமுகவுக்கு திடீரென மொழியின் மீது பற்று வரும் நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பை மட்டும் நடத்த தயங்குகிறார்கள்.
அது பற்றி கேட்டால் மத்திய அரசுக்கு தான் அதிகாரம் இருக்கிறது என்கிறார்கள். பீகார் உட்பட பிற மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்போது தமிழக அரசு மட்டும் அதனை நடத்த தயங்குகிறது. முதலில் டாஸ்மாக்கில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்ததாக கூறிய நிலையில் ஒரே வாரத்தில் அது ஆயிரம் கோடியாக குறைந்து விட்டது. இது தொடர்பான விசாரணை முடிவதற்குள் ஒன்றுமே இல்லை என்று கூறி விடுவார்கள். மேலும் உற்பத்தியாளரும் விற்பனையாளரும் தமிழகத்தில் ஒரே ஆளாகத்தான் இருக்கிறார்கள் என்று கூறினார்.