புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மண்டையூர் சேதிராயன் காடு பகுதியில் சித்திரகுமார்-ஜீவிதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 18 வயதில் மணிகண்டன் என்ற மகனும் 16 வயதில் பவித்ரா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பவித்ரா நேற்று முன் தினம் இரவு நீண்ட நேரமாக செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் மணிகண்டன் தன்னுடைய தங்கையை கண்டித்ததோடு செல்போனை அவரிடம் இருந்து பிடுங்கியுள்ளார். பெற்றோரும் பவித்ராவை கண்டித்த நிலையில் கோபத்தில் மணிகண்டன் தன் தங்கையின் செல்போனை கீழே போட்டு உடைத்தார்.

இதனால் பவித்ரா மிகவும் சோகமாக காணப்பட்டார். அதன் பிறகு பவித்ரா சாகப்போவதாக கூறிவிட்டு அருகில் உள்ள கிணற்றுக்கு ஓடிப் போய் குதித்து விட்டார். அவரைக் காப்பாற்றுவதற்காக மணிகண்டனும் கிணற்றில் குதித்த நிலையில் அண்ணன் தங்கை இருவரும் பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.