நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உடலுறவு வைத்துவிட்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி கடந்த 2012 ஆம் ஆண்டு புகார் கொடுத்தார். சீமானால்  தான் 6 முதல் 7 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு மிக தீவிரமானது என்றும் இந்த வழக்கை எவ்வளவு சீக்கிரத்தில் ரத்து செய்ய முடியாது என்றும் கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்தது.

அதன்பிறகு இந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ள நிலையில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் சீமான் ஆஜராகவில்லை. வேறொரு நாளில் ஆஜராவதாக கூறி தன் வழக்கறிஞர்கள் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் எனவும் ஒருவேளை நேரில் ஆஜராகாவிட்டால் சீமானை கைது செய்ய நேரிடும் என எச்சரித்து போலீசார் அவருடைய வீட்டில் சம்மன் ஓட்டினர்.

இதனை நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் கிழித்துள்ளனர். இது தொடர்பாக கேட்க சென்ற போலீசாரை சீமான் வீட்டு காவலாளி தாக்கியுள்ளார். சீமான் வீட்டில் காவலாளியாக வேலை பார்ப்பவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவருடைய பெயர் அமல்ராஜ். இவர் போலீசாரை தாக்கியதோடு தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர்களை மிரட்டியுள்ளார். இதனால் போலீசார் அமல்ராஜை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். அது பாயிண்ட் 3 வகை துப்பாக்கியைச் சேர்ந்தது. அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் 20 குண்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.