
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த ஒரு இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய டிடிஎப்ஃ வாசன் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நிலையில் அவருடைய ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் ஜாமினில் வெளியே வந்த டிடிஎப்ஃ வாசன் சென்னையில் பைக் உபரி பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். அதோடு அவர் யூட்யூபில் பலவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் டிடிஎப்ஃ வாசன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தார். அப்போது சாமி தரிசன வரிசையில் நின்றிருந்த பக்தர்களிடம் பிராங்க் என்னும் பெயரில் வீடியோ பதிவு செய்து இணையதளங்களில் பதிவிட்டார். இச்செய்தி அங்கிருந்த முதன்மை கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு மன வருத்தமடையும் வகையில் இது போன்ற செயல்களை செய்யும் நபர்களை கைது செய்ய வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் செய்தி வெளியிட்டது. இதற்காக டிடிஎப்ஃ வாசன் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளிக்க தேவையான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.