அகமதாபாத் நகரத்தில் உள்ள கோகாரா பகுதியில் உள்ள ‘பரிஷ்கர்-1’ அபார்ட்மென்ட் வளாகத்தில், ஏப்ரல் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை நான்காவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிபத்து நடந்தபோது வெப்பம் மற்றும் புகை பிற கட்டடத்திலும் பரவியது. இதனால் அடுக்குமாடி வாசிகள் தங்கள் உயிரைக் காக்க  பால்கனி வழியாக தப்பிக்க முயன்றனர். அச்சமயம் நடந்த ஒரு அதிரடியான காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. இதில் ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளை நான்காவது மாடி பால்கனியில்  இருந்து கீழே உள்ளவவர்களிடம் எச்சரிக்கையுடன் கையால் இறக்கி விடுகிறார். கீழ் மாடியில் இருந்த இரண்டு ஆண்கள் துணிவுடன் அந்தக் குழந்தைகளை பிடித்து அவர்களை மீட்டனர்.

 


அந்த பெண் தானும் தப்பிக்க முயன்றபோது, கீழே இறங்கும் போது  தலைகீழாக கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக கீழிருந்தவர்கள் அவசரமாக அவரது கால்களைப் பிடித்து உயிரைக் காப்பாற்றினர். தீ விபத்தில் சிக்கிய 18 பேரும் தீயணைப்பு துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தீவிபத்து ஏற்பட்டதும் ஏழு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது தீவிபத்தின் காரணம் குறித்து அகமதாபாத் தீ மற்றும் அவசரப் பணிகள் துறை மற்றும் போலீசார் இணைந்து முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தற்காலிகமாக உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்பட்டு வருகிறது.