மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் தலை முடி உதிர்வும், நகங்கள் பெயர்வும் ஏற்படும் அதிர்ச்சியான உடல்நலப் பிரச்சனை நிலவுகிறது. ஷேகான் தாலுகாவில் உள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 279 பேர் 2024 டிசம்பரில் இருந்து 2025 ஜனவரி வரை திடீரென தலைமுடி உதிர்ந்து வழுக்கையாகியுள்ளனர்.

முதலில் அதன் காரணம் புரியாத நிலையில், மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது, அப்பகுதியில் மக்கள் அதிகளவில் சாப்பிட்ட கோதுமையில் நச்சுத்தன்மை இருப்பது தெரியவந்தது.

இந்தச் சிக்கலுக்கு தீர்வாக அரசு உடனடியாக சிகிச்சை முகாம்கள் அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியுள்ள நிலையில், தற்போது மேலும் புதிய உடல்நலக் கோளாறாக நகங்கள் பெயர்ந்து விழும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

4 கிராமங்களைச் சேர்ந்த 29 பேர் தங்கள் கை விரல்களில் உள்ள நகங்கள் விரிசல் ஏற்பட்டு, பின்னர் முழுமையாக பெயர்ந்து விழுவதாக புகார் தெரிவித்துள்ளனர். மாவட்ட சுகாதாரத்துறை மருத்துவர் அனில் பங்கர் கூறுகையில், “இவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ரத்த மாதிரிகள் எடுத்துத் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன,” என தெரிவித்தார்.

இதற்கான காரணம் நிலத்தடி நீர், மண் மற்றும் சில உணவுப் பொருட்களில் செலினியம் என்ற கனிமத்தின் அளவு அதிகரித்திருக்கலாம் என நலத்துறை சந்தேகிக்கிறது. மாவட்ட மருத்துவ அதிகாரி பிரசாந்த் தாங்கடே, “இது தொடர்பாக விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது வரை 30 பேருக்கு இந்த நக விழும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது,” என கூறியுள்ளார். இச்சம்பவம் அந்த பகுதிக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.