திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகாவைச் சேர்ந்த அஜித் குமார் (27) என்பவரிடம், கடந்த 2023ஆம் ஆண்டு மின்சாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் பெற்றுவைத்து மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டவர், அதே மாவட்டத்தில் போலீஸ்காரராக பணியாற்றிய பெருமாள்சாமி (33).

வேலைவாய்ப்பு கிடைக்காமல் போனதோடு, பணத்தை திருப்பித் தருமாறும் கூறிய பின்னரும் பதில் அளிக்காததால் அஜித் குமார் தேவர்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையில், பெருமாள்சாமி சென்னை ஓட்டேரி குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, ஒரு ஆய்வாளருக்கு டிரைவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், அஜித் குமார் அளித்த புகாரின் விசாரணை அறிக்கை, புளியந்தோப்பு காவல் மாவட்ட துணை கமிஷனர் முத்துக்குமார் அவர்களிடம் அனுப்பப்பட்ட நிலையில், மோசடியை உறுதி செய்த போலீசார், பெருமாள்சாமியை பணியிடை நீக்கம் செய்து அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டனர்.