
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு எதிராக இந்தியர்கள் கடும் எதிர்வினை தெரிவித்து வருகிறார்கள். இதன் விளைவாக, சமீபத்தில் சமூக வலைதளங்களில் “Boycott Turkey” மற்றும் “Boycott Azerbaijan” என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாக, இந்த நாடுகளுக்கான இந்திய சுற்றுலா பயணத்தில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், முன்னணி ஆன்லைன் பயண சேவை நிறுவனமான MakeMyTrip வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஒரு வாரத்தில் துருக்கி மற்றும் அஜர்பைஜான் செல்லும் முன்பதிவுகள் 60 சதவீதம் குறைந்துள்ளதாகவும், அதே காலப்பகுதியில் ரத்து செய்யப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 250 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது இந்திய பயணிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளதாக MakeMyTrip விளக்கம் அளித்துள்ளது.
மேலும், MakeMyTrip நிறுவன பேச்சாளர் கூறுகையில், “நம் தேசத்தின் ஆயுதப் படைகளுக்காக பாராட்டும் உணர்வில், நாட்டுடன் ஒற்றுமையோடு நாம் இணைந்திருப்பதை வெளிப்படுத்தும் வகையில், துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கான தேவையற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்” என தெரிவித்தார். இந்த தகவல்கள், இந்திய சுற்றுலா துறையின் தேசிய உணர்வையும், பயணிகள் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன.