
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மடப்புரம் காவலாளி அஜித் குமார் என்பவர் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் 18 இடங்களில் காயம் இருப்பதாக தெரியவந்த நிலையில் 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்ததோடு அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சிவகங்கை மாவட்ட எஸ்.பியும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் காவலர்கள் அஜித்குமாரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளைகள் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அதாவது அஜித் குமாரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லாமல் எதற்காக வெளியே வைத்து விசாரணை நடத்தினீர்கள். இந்த வழக்கில் எதற்காக காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் ஒட்டுமொத்த காவலர்களையும் குறை சொல்லவில்லை. ஆனால் கண்டிப்பாக தவறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரேத பரிசோதனை அளிக்க இதுவரை அளிக்காதது ஏன்.? பிரேத பரிசோதனை அறிக்கையை எதற்காக இன்னும் நடுவர் நீதிபதிக்கு அனுப்பவில்லை.
யாருடைய உத்தரவின் பெயரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என்பதை டிஜிபி பதிலளிக்க வேண்டும். அடிப்பதற்கு எதற்கு போலீஸ். அவர்களை கிராம மக்களிடம் விட்டால் அவர்களை அடித்து உண்மையை வாங்கி விடுவார்கள். சிசிடிவியில் பதிவாக கூடாது என்பதற்காக அஜித்குமாரை வெளியே வைத்து விசாரித்தீர்களா. மேலும் காவலாளி அஜித் குமார் மரணத்திற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியதோடு வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.