
கேரள மாநிலம் கண்ணூர் அருகே பேரி பகுதியை சேர்ந்த பிரதீபன் என்பவருடைய மனைவி ஓமனா. இவர்களுக்கு 25 வயதில் அஸ்வினி என்ற ஒரு மகள் உள்ளார். இவருக்கும் கப்பாட் பெரிங்கரைப் பகுதியை சேர்ந்த விபின் என்ற நபருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதனிடையே கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் விபின் தாக்கியதில் அஸ்வினி காதில் காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அஸ்வினி கோபித்துக் கொண்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.
கடந்த ஜூலை 15ஆம் தேதி விபினின் சகோதரி திருமணம் நடந்த நிலையில் அஸ்வினி அதில் கலந்து கொண்டு விட்டு தாய் வீட்டுக்கு திரும்பினார். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 16ஆம் தேதி தூங்க சென்றவர் மறுநாள் நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் பெற்றோர் கதவை தட்டிப் பார்த்த நிலையில் பிறகு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது அஸ்வினி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. உடனே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அஸ்வினி உயிர் இழந்தார். இது தொடர்பாக அஸ்வினியின் பெற்றோர், தன்னுடைய மகளை விபின் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்திரவதை செய்து வந்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.