கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே, கைகள் கட்டப்பட்ட அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் நடைப்பயிற்சி சென்றபோது துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, சடலம் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு, உடற்கூறு பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலத்தின் மார்பில் ‘Aparna’ என்று பச்சை குத்தப்பட்டிருந்தது..

இதன் அடிப்படையில் அந்த நபர் மதுரையைச் சேர்ந்த சூர்யா என்றும், சென்னையில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து  காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சூர்யாவை பேரூரைச் சேர்ந்த கார்த்திக், நரேன் கார்த்திக், மாதேஷ் மற்றும் முகமது ரஃபி ஆகிய நால்வர் இணைந்து கொலை செய்தது தெரியவந்தது.

இவர்களில் கார்த்திக்கின் காதலியுடன் சூர்யா வீடியோ அழைப்புகள் மூலம் அடிக்கடி பேசிவந்ததால், முன்விரோதம் ஏற்பட்டது.  கடந்த வியாழக்கிழமை இரவு, கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் சூர்யாவுக்கு விஷ ஊசி செலுத்தி, பின்னர் தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்தனர்.

கொலைச் செய்த பின்னர் சூர்யாவின் சடலத்தை வெள்ளிக்கிழமை இரவு வரை வீட்டிலேயே வைத்திருந்த அவர்கள், பின்னர் வாடகை கார் ஒன்றில் சடலத்தை பேருந்து நிலையம் அருகே வீசி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.