யூடியூப் சேனல் நடத்துபவர்கள் பிராங்க் வீடியோ என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பீர்முகமது, ஷேக் முகமது ஆகியோர் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிராங்க் செய்து வீடியோ எடுத்துள்ளனர். ஒருவர் கையில் அடிபட்டு கட்டு போட்டு இருப்பது போல நடித்துள்ளார். கட்டு போட்ட வாலிபருடன் வந்த மற்றொருவர் அங்கு வேலை பார்க்கும் நபரிடம் படம் பிடிக்கணும் தியேட்டர் எங்க இருக்கு என கேட்டுள்ளார். ஸ்கேன் எடுக்கும் இடம் பற்றி கேட்பதாக புரிந்து கொண்ட அவர் அங்கு செல்ல வழி சொல்கிறார்.

அதற்கு அந்த வாலிபர் அங்கு அமரன் படம் ஓடுதா? வேட்டையன் படம் ஓடுதா? என நக்கலாக கேட்டார். இதனை கேட்டதும் மருத்துவமனை ஊழியர் கோபமடைந்தார். மேலும் மருத்துவமனை அதிகாரி இரண்டு வாலிபர்களையும் கண்டித்தார். உடனே அந்த வாலிபர்கள் அதிகாரியை அவதூறாக பேசியுள்ளனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வரலானது. இந்த நிலையில் மருத்துவமனை அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பீர் முகமது, ஷேக் முகமது இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். பொது இடங்களில் பிராங்க் வீடியோ எடுக்கும் செயல்களில் ஈடுபட்டு தொந்தரவு அளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.