ரஷ்யா- உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி முதல் தனது முழுமையான படையெடுப்பை தொடங்கியது. தற்போது வரை அந்தப் போர் முடிவில்லாமல் நடந்து வருகிறது. இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பெரிய அளவிலான தாக்குதல்களால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உக்ரைனை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவரின் உடல் ரஷ்ய சிறையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஒரு ஆண்டுக்கு முன், உக்ரேனிய பத்திரிக்கையாளர் விக்டோரியா ரோஷ்சினா (27) என்பவர் ரஷ்ய ஆக்கிரமிப்பு பிரதேசம் குறித்த செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ரஷ்ய படையினரால் கடத்தப்பட்டு பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு அவரது உடல் சிதைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் உக்கிரைனுக்கு ஒரு பையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிதைக்கப்பட்ட நிலையில் அனுப்பி வைக்கப்பட்ட அவரது உடலில் கண்கள், மூளை மற்றும் குரல்வளை ஆகியவை அகற்றப்பட்ட நிலையில் கொடூரமாக இருந்தன.

இதுவே அவர் அனுபவித்த கொடூரமான சித்திரவதைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் இச்சம்பவம் உலகம் முழுவதும் மனிதநேயம் குறித்த கேள்வியை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளரான விக்டோரியா ரஷ்யாவின் பிசாசுகளின் அறை என அழைக்கப்படும் டாகன்ரோக்கில் உள்ள SIZO  2 சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.

அந்த சிறைக்கு கொண்டு வரப்படும் கைதிகள் கண்கள் கட்டப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் அடித்தல்,  மின்சார நாற்காலி, தலைகீழாக தொங்கவிடுதல் போன்ற பயங்கரமான சித்திரவதை நடப்பதாக முன்னாள் கைதிகள் தெரிவித்து இருந்தனர். மேலும் உக்ரேனிய புலனாய்வாளர்கள் விக்டோரியாவின் உடல் குறித்த ஆய்வில் கூறியதாவது, அவரது உடல் மின்சார அதிர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதாகவும், விலா எலும்புகள், கழுத்து எலும்புகளில் முறிவுகள் ஏற்பட்டு இருக்கும் அறிகுறிகளும் காணப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரியில் உக்ரைனுக்கு 757 உடல்கள் திருப்பி அனுப்பப்பட்டதில் அடையாளம் தெரியாதாத ஆணின் உடல் என முத்திரை குத்தப்பட்டிருந்த விக்டோரியாவின் உடல் தற்போது ஒரு டி.என்.ஏ சோதனையின் மூலம் அவர் ஒரு பெண் என தெரியவந்துள்ளது. அவர் சிறையில் மிகுந்த கொடுமைக்கு ஆளாகியுள்ளதும், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தலை மொட்டை அடிக்கப்பட்டு, கழுத்து உடைக்கப்பட்டு, உடல் பாகங்கள் அகற்றப்பட்ட நிலையில் உயிரிழந்து உள்ளதாக தெரியவந்துள்ளது.

அவரது உடலில் முக்கியமான பாகங்கள அகற்றப்பட்டதால் அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் ஊடக அறக்கட்டளையின் படி பத்திரிக்கை துறையில் துணிச்சலான பெண் விருதைப் பெற்றவர் விக்டோரியா.

உக்ரைனின் பிற ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டதால் அவருக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. அவரது மரணம் ரஷ்யாவின் போர் குற்றங்கள் குறித்து வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மேலும் ரஷ்ய அதிபர் புதினின் பிசாசுகளின் அறை  குறித்த உண்மையை உலகிற்கு வெளிப்படுத்த உக்கிரைன் முழுமையாக இவ்விசாரணையில் தொடர்ந்து இறங்கி உள்ளது.