பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட ஹரியானா யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா தொடர்பான புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “Callum Abroad” என்ற யூடியூப் சேனலை நடத்தும் ஸ்காட்டிஷ் யூடியூபர் Callum Mill, மார்ச் மாதத்தில் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அனார்கலி பஜாரில் ஜோதி மல்ஹோத்ராவைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது எடுத்த வீடியோவில், ஜோதியை சுற்றி AK-47 துப்பாக்கிகளுடன் குறைந்தது ஆறு பேர் பாதுகாப்பாக காட்சியளிக்கிறார்கள். இதைப் பார்த்த Callum, “அவள் சுற்றி ஏன் இவ்வளவு ஆயுதம்? நான் மட்டும்தானே தனியாக சுற்றிட்டு இருக்கேன்,” என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்.

இந்த வீடியோவில், ஜோதி மற்றும் Callum இடையே நடக்கும் உரையாடலும் உள்ளது. Callum ஐந்து முறை பாகிஸ்தான் வந்ததாகவும், இந்தியாவுக்கும் சென்றுள்ளார் எனவும் கூற, ஜோதி தன்னை இந்தியாவிலிருந்து வந்ததாக அறிமுகப்படுத்துகிறார். பாகிஸ்தானின் விருந்தோம்பல் குறித்து கேள்வி எழுப்பும் Callumக்கு, ஜோதி “மிகவும் நன்றாக இருக்கிறது” என பதிலளிக்கிறார். இந்த வீடியோவில் ஜோதி மல்ஹோத்ரா தனக்கென தனிப்பட்ட பாதுகாப்புடன் நடக்க, பக்கத்தில் மற்ற சுற்றுலாப் பயணிகளைப் போலவே தோற்றமளிக்கும் சிலரும் அவருடன் இருப்பது தெரிய வருகிறது.

இந்த வீடியோ வைரலான பின்னணியில், ஜோதி மல்ஹோத்ராவைப் பற்றிய பல விபரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்தியா திரும்பியதும், அவர் பாகிஸ்தானின் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவருடைய டிஜிட்டல் சாதனங்கள் தற்போது போலீசாரால் பரிசோதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவரது ஆடம்பர வாழ்க்கைமுறையையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விமானங்களில் முதல் வகுப்பு பயணம், உயர்நிலைக்குட்பட்ட ஹோட்டல் தங்குமிடம், பிரம்மாண்ட உணவகங்கள் – இவை அனைத்தும் அவரது வருமானத்தை ஒத்ததல்ல எனவும், வெளிநாட்டில் பயணங்கள் “ஸ்பான்சர் செய்யப்பட்டவை” என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து வந்த உடனே ஜோதி சீனாவுக்குப் பயணம் செய்ததாகவும், அங்கும் சொகுசு கார்களில் பயணம் செய்து, விலையுயர்ந்த நகைக் கடைகளுக்கு சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது ஜோதி மல்ஹோத்ரா வழங்கிய அனைத்து தகவல்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் குறித்த தகவல்கள் தினசரி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.