சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் எட்டிக்குட்டை பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (65) மற்றும் அவரது மனைவி வித்யா (60) ஆகிய இருவரும் தங்கள் வீட்டு முன்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தவர்கள். நேற்று மாலை, தங்கள் வீட்டிற்குள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்ததை அப்பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த சூரமங்கலம் போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து மோப்ப நாய், அருகிலுள்ள வீட்டை நோக்கி சென்றதையடுத்து, அந்த வீட்டை சோதனையிட்ட போலீசார் ரத்தக் கறைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, சந்தேகத்திற்கிடமான ஒருவர் நடந்துச் செல்வது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்த போது, அவரது கால் நகத்தில் இருந்த ரத்தக்கறை போலீசாருக்கு சந்தேகத்தை உறுதி செய்தது. கடுமையான விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் சவுத்ரி என்பது தெரியவந்தது.

போலீசாரிடம் அவர் தெரிவித்த தகவலின்படி, பாஸ்கரனிடம் குளிர்பானம் வாங்கும் போது, வித்யா அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பார்த்த சந்தோஷ் அதை திருட தீர்மானித்துள்ளார். பின்னர், தனது வீட்டிலிருந்து சுத்தியலை எடுத்து, வித்யாவின் தலையில் தாக்கி சங்கிலியை பறித்துள்ளார். இதில், வித்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், வீட்டிற்குள் வந்த பாஸ்கரனையும் தாக்கியதால், அவரும் உயிரிழந்தார். தன் கை, கால்களை கழுவி, எதுவும் நடக்காதது போல நடந்த போது அவர் பிடிபட்டார். அவரிடம் இருந்து 10 பவுன் தங்க நகை மீட்கப்பட்டதாகவும், போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.