
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுமதி (58), கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். கடந்த மே 21-ஆம் தேதி அவர் உறவினர் திருமணத்திற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். மறுநாள் அதிகாலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு டவுன் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு நடத்திய விசாரணையில், பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கம் உள்பட மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சந்தேகப்படும் படியாக வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ஆவத்திபாளையத்தை சேர்ந்த கணேசன் (46) என்பதும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் உறுதியானது.
அவர் தறி தொழிலாளி ஆவார். அவரிடமிருந்து 10 பவுன் நகை, ரூ.25,000 ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. டூவீலரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரிடம் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
போலீசார் கைது செய்த கணேசனை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவல் உத்தரவிட்டு, சேலம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த கொள்ளை வழக்கில் கணேசனுடன் சேர்ந்திருந்த அவரது கூட்டாளி தலைமறைவாக இருப்பதாகவும், அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.