பிரிட்டனின் பர்மிங்காம் நகரத்தில் வசிக்கும் 35 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த அமித் கோஷ், சமீபத்தில் லண்டனில் உள்ள ஒரு கஃபேவில், தனது தோற்றத்துக்காக சேவை மறுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அரிய மரபியல் நோய் காரணமாக அவரது முகத்தில் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இந்த தோற்றம் காரணமாக கஃபே ஊழியர் ஒருவர் எங்கள் சேவை நேரம் முடிந்தது என கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் அங்கு அமர்ந்திருந்த மற்ற நபர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தார். “அங்கே உள்ள அனைவரும் என்னை பேயைப் போலவே பார்த்தனர்” என அமித் கோஷ் வேதனையுடன் கூறினார்.

அமித், 11 வயதில் இடது கண்வலை அகற்றும் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்நிலையில், அவர் தனது வாழ்நாளில் பல்வேறு இடங்களில் இழிவான விமர்சனங்களையும் கேலிகளையும் எதிர்கொண்டு வந்துள்ளார். சிலர் நேரடியாக முகத்தை பார்த்து கேலி செய்துள்ளனர்.

இதுபோன்ற அனுபவங்களுக்கிடையே, பள்ளியில் கிரிக்கெட் விளையாடுவதைத் தொடங்கி நண்பர்களுடன் பழகி அமித் கோஷ் தன்னை தானாகவே ஏற்க கற்றுக்கொண்டார். தொடர்ந்து சமூகத்தில் எதிர்கொள்வது போல, “அந்த ஆள பாத்தியா?” என கைதட்டியும், சுட்டிக்காட்டியும் பேசும் பழக்கமும் இருந்ததாக கூறினார்.

இந்த சவால்களை தாண்டி இன்று அமித் கோஷ், சமூக ஊடகங்களில் தனது கதையை பகிர்ந்து வருகிறார். தனது மனைவி பியாலி அவரை ஊக்குவித்து, TikTok-ல் கணக்கொன்றைத் தொடங்கச் செய்தார். 2023 ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த பயணம், இன்று 2 லட்சம் பின்தொடர்பவர்கள் மற்றும் மில்லியன் கணக்கான விருப்பங்களுடன் பலருக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் ஒரு வழியாக மாறியுள்ளது.

சட்டத் துறையில் பணியாற்றிய அமித், தற்போது முழுநேர முன்மாதிரி பேச்சாளராக மாறி, பள்ளிகளிலும் சமூகத்தில் தன்னம்பிக்கையுடனும் தனித்துவத்துடனும் வாழ்வதற்கான உரைகளை வழங்கி வருகிறார். “நாம் நம்மை நேசிக்க கற்றுக்கொண்டால் தான் உலகம் நம்மை மதிக்கும்,” என அமித் கோஷ் கூறியுள்ளார்.