சென்னை தாம்பரம் – வேளச்சேரி சாலையில் கடந்த ஜூன் 27ம் தேதி இரவு போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, சந்தோஷபுரம் வனத்துறை அலுவலகம் அருகே 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் வீசப்பட்டு கிடப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், உயிரிழந்தவர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜெயக்குமார் (35) என்பதும், கிண்டியில் பிரபல உணவகத்தில் பிரியாணி மாஸ்டராக பணியாற்றி வந்தவர் என்பதும் தெரியவந்தது.

பிரேத பரிசோதனையில் அவர் அடித்துக் கொல்லப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில், ஜெயக்குமார் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததுடன், பல இளம் பெண்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. அதில் சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, வேலை வாங்கித் தருவதாக கூறி 11,000 ரூபாயும் ஒரு மோதிரமும் பெற்றுள்ளார். ஆனால் வேலை வாங்கி தராததால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அதன்பின், அந்த பெண் தனது உறவினரான குரோம்பேட்டையை சேர்ந்த சரவணனிடம்  இது பற்றி கூறியுள்ளார்.

இதையடுத்து, சரவணன், சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஸ்வரன், சச்சின், பிரதீப், ராஜேஷ் மற்றும் தினேஷ் ஆகியோர் ஜெயக்குமாரை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று, மது அருந்திய நிலையில் பணத்தை கேட்டும், தராததால் கோபத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் உயிரிழந்த ஜெயக்குமாரின் உடலை சந்தோஷபுரம் வனத்துறை அலுவலகம் அருகே வீசி விட்டு அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறு பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் நீதிமன்ற காவலில் வைத்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது. மேலும் வேலை வாய்ப்புக்காக பணம் பெற்றதாலும், மோதிரம் கொடுத்தும் திருப்பித் தராததாலும் ஏற்பட்ட சண்டை, உயிர் பலியாக முடிவடைந்தது என்பது உள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.