தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் பர்ஹானா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா, அனுமோல், கிட்டி போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதனிடையே ஐஸ்வர்யா ராஜேஷ் இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முன்னதாக படத்தின் டிரைலர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற பர்ஹானா பட நிகழ்ச்சியிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் வெங்கடேசன் பேசியதாவது “நான் சென்னை புதுபேட்டையில் வளர்ந்தேன். அங்கே இஸ்லாமியர்கள் அதிகம் இருப்பார்கள்.

புதுபேட்டை, திருவல்லிக்கேணி என நான் பிரியாணி சாப்பிட்டு வளர்ந்தது எல்லாமே இஸ்லாமிய நண்பர்கள் நடுவில் தான். நான் வளர்ந்த அனுபவத்தினை படமாக எடுத்திருக்கிறேன். இதனிடையே மதம் சார்ந்து படம் எடுக்கிறேன் என சர்ச்சை எழுந்து உள்ளது. என் நண்பர்களை பற்றிதான் படம் எடுத்து இருக்கிறேன். இப்படம் மதம் சார்ந்தது அல்ல, மனம் சார்ந்தது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் பேசினார்.