பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுடனான  போரில் வெற்றிபெற்றதாக கூறி, அதன் நினைவாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபுக்கு ஒரு சுவரொட்டிப் படம் பரிசளித்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த படம், பாக் ராணுவத் தலைவர் ஃபீல்ட்மார்ஷல் அசிம் முனீர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட விருந்தின் போது வழங்கப்பட்டது. அந்த படம் ‘Operation Bunyan-un-Marsoos’ என்ற ராணுவ நடவடிக்கையின் நினைவாக வழங்கப்பட்டது. ஆனால், சமூக வலைதளங்களில் பலர் அந்த படம், சீனாவின் ‘People’s Liberation Army’ ராணுவம் நான்கு வருடங்களுக்கு முன் நடத்திய பயிற்சியில் எடுத்த புகைப்படம் என அடையாளம் காண, புகைப்படத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளானது.

இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாக பரவ, நெட்டிசன்கள் அதனை கடுமையாக விமர்சித்தனர். “நீங்க சொல்லுற போர் வெற்றிக்கே உண்மையா இல்லையா தெரியல, ஆனா பரிசா குடுத்த படம் சீன ராணுவத்துக்கே சொந்தமா இருக்குறதே உண்மை!” என ஒருவர் கூறினார். “இந்தியா மீது வெற்றி பெற்றதாக பேசுறவர்களுக்கே ஒரு சொந்த ராணுவ படம் இல்ல. இதுதான் உண்மை நிலை,” என மற்றொருவர் சாடினார். மேலும், இந்த நிகழ்வின் மூலம் பாக் அரசும், ராணுவமும் பொய்யான வெற்றிக்கதைகளை விரிவாக்க முயற்சிப்பதாக பலர் விமர்சித்தனர்.

 

இந்நிலையில், ஃபீல்ட்மார்ஷல் பட்டம் ஆசிம் முனீருக்கு வழங்கப்பட்டதிலும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொதுவாக இந்த பட்டம் போரில் வெற்றிபெற்ற ராணுவ தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆனால், பாக்-இந்தியா இடையே சமீபத்தில் போர் நடந்ததில்லை. கூடவே, கடந்த ‘Operation Sindoor’ சமயத்தில், இந்தியா தான் பாக் விமானத் தளங்கள் மற்றும் ட்ரோன்களுக்கு தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் உள்ளன. எனவே, உண்மையற்ற வெற்றிக்கதை மற்றும் சீன படத்தை பயன்படுத்திய விவகாரம் பாக் ராணுவத்துக்கு பெரும் வெட்கத்தையும், விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. தற்போது வரை பாக் ராணுவம் இதற்கென எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை.