குஜராத்தில், ஹெல்மெட் அணியாமல் சிக்கிய நபர் ஒருவர் சொன்ன காரணத்தை கேட்டு போலீசாரே புரிந்து கொண்டு அவரை அனுப்பி வைத்தனர்.
மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. அதன்படி ஹெல்மெட், பைக் ஆவணங்கள் இல்லாமலும் மற்றும் விதிகளை மீறுபவர்களுக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பல இடங்களில் விதிகளை மீறுபவர்கள் அபராதங்களை கட்டி வருகின்றனர். அந்த வகையில் குஜராத் மாநிலத்தின் போடேலி பகுதியைச் சேர்ந்த ஜாகீர் மாமோன் என்ற பழ வியாபாரி ஒருவர் ஹெல்மெட் அணியாமல் தனது பைக்கில் சென்ற நிலையில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்க முயன்றனர்.

அப்போது, அந்த பழ வியாபாரி சொன்ன காரணத்தை கேட்ட போலீசார் செய்வதறியாது திகைத்தனர். அப்படி அவர் என்ன தான் கூறினார் என்றால், என்னுடைய தலை பெரிதாக இருப்பதால் தலைக்குள் நுழையும் படியான எனக்கு பொருத்தமான ஹெல்மெட் பல கடைகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆகவே அதனாலேயே என்னால் ஹெல்மெட் அணியமுடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பின்னர், அவரது நிலையை புரிந்துகொண்ட போலீசாரும் அவருக்கு அபராதம் எதுவும் விதிக்காமல் அங்கிருந்து அனுப்பிவைத்துள்ளனர். வாகன ஓட்டியிடம் முறைப்படி ஆவணங்கள் அனைத்தும் இருந்ததாலும், ஹெல்மெட் அணிய முடியாத சூழ்நிலை அவரிடம் உள்ளதால் அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்படாமல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஹெல்மெட் தலைக்குள் நுழையாததால் ஒருவர் ஹெல்மெட் அணியாதது ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.