இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிஎஸ்டி இழப்பு வழங்குவதை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கை ஏற்கப்படாதது ஏமாற்றம்.
ஏழை – எளிய நடுத்தர விளிம்பு நிலை மக்களுக்கு பட்ஜெட் எந்த வித நம்பிக்கையும் அளிக்கவில்லை. நகர்புற கட்டமைப்புக்கு ரூபாய் பத்தாயிரம் கோடி என்பது மிகக் குறைவான தொகையாகும். தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களை மட்டுமே குறிவைத்து திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வருமான வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும். பட்ஜெட் அனைத்து மாநிலங்களுக்குமானது என்பதிலிருந்து ஒன்றிய அரசு முற்றிலும் விலகிச் செல்வதை இந்த பட்ஜெட் காட்டுகிறது. தமிழ்நாட்டுக்கு புதிய திட்டம் எதையும் அளிக்காத ஒன்றிய பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் இந்த பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது வேதனை என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.