தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சரான எம்.ஜி.ஆரின் 33ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதலமைச்சரான எம்ஜிஆர் கடந்த 1987ஆம் ஆண்டு இதே நாளில் மறைந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அதிமுக சார்பில் அவரது நினைவு தினமான இன்று அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் உருவ படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அதிமுக அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் போன்ற ஏராளமானோர் சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினார்கள். இதையடுத்து தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில்” மகத்தான வெற்றியை பெற்று மீண்டும் வரலாறு காணாத சாதனையை நிகழ்ததுவோம்” என்று அதிமுகவினர் உறுதிமொழி எடுத்தனர்.