மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை என்றும், தங்களது பதவியை காப்பாற்றவே அவர்கள் யாகம் நடத்தினார்கள் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தெரு தெருவாக காலி குடங்களுடன் தண்ணீருக்காக தேடி அலைந்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் உள்ள மக்கள் தண்ணீர் பிரச்னையால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டாலும் தண்ணீர் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. இதனால் தமிழக அரசு அனைத்து மாவட்டத்தின் தலை நகரங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடத்த வேண்டும் என்று அதிமுக செயலாளர்களுக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி சென்னை சேப்பாக்கதில் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக செயலாளர்கள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய போது, குடம் இங்கே! தண்ணீர் எங்கே? என்று அரசுக்கு கேள்வி எழுப்பினார். மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தினால் தவறில்லை.
தங்களது பதவியை காப்பாற்றவே அவர்கள் யாகம் நடத்துகின்றனர். தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது என்னை யாரும் உள்ளாட்சி துறை அமைச்சர் என்று அழைக்க மாட்டார்கள், நல்லாட்சி துறை அமைச்சர் என்று தான் அழைப்பார்கள்” என்று அவர் கூறினார்.