WOW!… மது பாட்டில்களில் இருந்து கண்ணாடி வளையல்கள்…. புது முயற்சியால் நல்ல லாபம் ஈட்டும் பெண்கள்….!!!!!

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் இருக்கும் போதும் சில இடங்களில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்கிறார்கள். இவர்கள் மீது காவல்துறையினர் மற்றும் கலால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதோடு மது பாட்டில்களையும் பறிமுதல் செய்கிறார்கள். இந்த மது பாட்டில்களை முன்னதாக குப்பையில் வீசி எறிந்த நிலையில் தற்போது கண்ணாடி வளையல் தயாரிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள்.

இந்த கண்ணாடி வளையலை தயாரிப்பதற்காக கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் என்ற தன்னாட்சி அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நிலையில், 150 பெண்களுக்கு முறையாக பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26-ம் தேதி சபல்பூர் கிராமத்தில் கண்ணாடி வளையல்கள் தயாரிக்கும் ஆலையை முதல் மந்திரி நிதீஷ் குமார் திறந்து வைத்துள்ளார்.

இந்த ஆலையில் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் வளையல்கள் வரை தயாரிக்கலாம். அதன் பிறகு 2 டன் அளவுக்கு மது பாட்டில்களில் இருந்து 70 ஆயிரம் வளையல்களை பெண்கள் தயாரித்து வரும் நிலையில், விமான நிலையங்கள் மற்றும் கண்காட்சிகளில் வைத்து அவற்றை விற்பனையும் செய்கிறார்கள். மேலும் இதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதாக பெண்கள் கூறியுள்ள நிலையில், அரசாங்கம் தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளனர்.