முறையாக சிகிச்சை இல்லை…. தொழிலாளருக்கு நடந்த கொடுமை…. கரூரில் பரபரப்பு….!!!

காகித ஆலையில் பணியிலிருந்த தொழிலாளருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியைச் சேர்ந்த அருண் சுதன் என்பவருக்கும் கரூர் செம்படாபாளையத்தில் வசித்து வரும் புவனேஸ்வரி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 5 வயதில் சஹானா என்ற பெண் குழந்தையுள்ளார். இதில் அருண் சுதன் புகளூர் காகித ஆலையில் கிரைன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ள நிலையில் அவருக்கு  நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே  ஆலையிலுள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பணிக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து அதிகாலை 4 மணிக்கு தண்ணீர் குடிக்க சென்ற அருண் சுதன் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை மீண்டும் முதலுதவி சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் அவருக்கு மறுபடியும் முதலுதவி அளிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அருண் சுதன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அருண் சுதனின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் அருண் சுதனுக்கு காகித ஆலை முதலுதவி சிகிச்சை மையத்தில் முறையாக பரிசோதித்து பார்த்திருந்தால் அவரது உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்றும், அவருடைய இறப்பிற்கு நிர்வாகத்தின் மருத்துவர்களே காரணம் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது இறந்தவரின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு ஆலையில் நிரந்தர வேலை வழங்க கோரியும், நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் கூறி உடலை வாங்க மறுத்துள்ளனர். மேலும் தொழிற்சங்கங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த புகளூர் நகராட்சி தலைவர், தாசில்தார், அரவக்குறிச்சி உட்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு காகித ஆலை செயல் இயக்குனர், சீனியர் மேலாளர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு அருண் சுதன் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு படிப்பின் அடிப்படையில் வரும் ஒரு மாதத்திற்குள் நிரந்தர வேலை தருவதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் மற்றும் தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். பின்னர் அருண் சுதனின் உடல் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கடப்பட்டது.