சாலையில் மரக்கட்டைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள புகழூர் பகுதியில் காகித ஆலை செயல்பட்டு வருகின்றது. எனவே காகிதம் தயாரிப்பதற்காக நாமக்கல் மாவட்டத்திலிருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த போது லாரி வேகத்தடையில் ஏறி இறங்கியபோது லாரியிலிருந்த மரக்கட்டைகள் அனைத்தும் சரிந்தன. அதுமட்டுமல்லாது லாரியை பின் தொடர்ந்து வந்த கார் மீதும் மரக்கட்டைகள் விழுந்துள்ளன. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.
இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர். இதனையடுத்து லாரி ஓட்டுநர் சாலையோரமாக லாரியை நிறுத்தினார். இந்நிலையில் சாலையின் நடுவே மரக்கட்டைகள் குவிந்து கிடந்ததால் அவ்வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் ஓட்டுநர் அப்பகுதி மக்களின் உதவியுடன் சாலையில் குவிந்து கிடந்த மரக்கட்டைகளை அப்புறப்படுத்தினார் அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.