முன்னறிவிப்பு இல்லாமல்… குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி..!!

டெல்லியில் உள்ள சீக்கிய கோவிலில் பிரதமர் மோடி இன்று வழிபாடு நடத்தினார்.

டெல்லியில் உள்ள சீக்கியக் கோவிலான ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு பிரதமர் மோடி முன்னறிவிப்பு ஏதுமின்றி இன்று காலை திடீரென்று சென்று வழிபாடு செய்தார். டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார்.

இன்று காலை ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு பிரதமர் வருகை தந்தது டெல்லி மக்களை வியப்பில் ஆழ்த்தியது. குரு தேஜ் பகதூர் சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குருவாக இருந்தார். அவரது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

பிரதமர் மோடி ஆரஞ்சுத் துணியால் தலையை மறைத்து பிரகாசமான மஞ்சள் குர்தாவுடன் இடுப்பு கோட் அணிந்து சீக்கிய முறைப்படி குரு தேஜ் பகதூரை வழிபட்டார். பின்னர் சீக்கிய மதகுருக்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார். குருத்வாராவிலிருந்து வெளியே வந்தபோது சீக்கிய பக்தர்கள் பிரதமருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.