புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ? நோபல் வென்ற இந்தியர் – அபிஜித் பானர்ஜி…!!

பொருளாதாரத்துக்கான 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை இந்தியாவில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் அபிஜித் பானர்ஜிக்கு கிடைத்துள்ளது.

என்னதான் இப்போது அமெரிக்காவில் பணியாற்றினாலும் அபிஜித் பானர்ஜிக்குப் பூர்வீகம் மேற்கு வங்கம்தான். 1961ஆம் ஆண்டு தீபக் – நிர்மலா இணைய தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்தான் இந்த அபிஜித் பானர்ஜி. இவரது தந்தை கொல்கத்தா மாநில கல்லூரியில் பொருளாதார துறையின் தலைவராக பணிபுரிந்தார். இவரது தாய் கொல்கத்தா சமூக அறிவியல் ஆய்வு மையத்தில் பேராசிரியாகப் பணிபுரிந்தார்.

புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பழமொழிக்கு ஏற்ப அபிஜித்தும் ஆரம்பம் முதலே படிப்பில் தூள் கிளப்பினார். குறிப்பாக அவரது தந்தை தீபக்கைப் போல இவருக்கும் பொருளாதாரத்தில் அலாதிப் பிரியம். 1979ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த அவர் கல்லூரியில் படிக்கச் சிறிதும் யோசனையின்றி தேர்ந்தெடுத்த துறை பொருளாதாரம்.

இவரது பெற்றோரும் இவருக்குத் துணையாக இருக்க 1981ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் தனது (B.S) இளங்கலையை முடித்தார். அதைத்தொடர்ந்து புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 1983ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். பொருளாதாரத்தில் மீதான அவரது காதல் தொடர அமெரிக்கா சென்று உலக புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை முடித்தார்.

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொருளாதாரத் துறையில் சர்வதேசப் பேராசிரியாகப் பணியாற்றிவருகிறார்.. முன்னதாக அவர் ஹார்வர், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியையாகப் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.2013ஆம் ஆண்டு மில்லினியம் டெவலப்மென்ட் கோல்ஸ் எனப்படும் மேம்பாடு இலக்குகளை வடிவமைக்க ஐநாவால் முன்மொழியப்பட்டவர்தான் இந்தப் பொருளாதாரப் புலி அபிஜித் பானர்ஜி.

பொருளாதாரத்தில் தலைசிறந்தவராக வலம்வரும் இவரின் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. தனது சிறுவயது தோழியான அருந்ததி துளியை மணந்த இவருக்கு 1991ஆம் ஆண்டு கபீர் என்ற மகன் பிறந்தார். பின் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து செய்தார்.அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழக்கத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்தபோது எஸ்தர் டஃப்லோ என்பவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாக மாற 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர் இந்த நோபல் தம்பதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *