15 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் கட்டுமான பணி மீண்டும் தொடங்கப்படுமா…? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்…!!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தென்கோவனுரில் அந்த பகுதி ஏழை  எளிய மக்கள் பயன்படும் விதமாக திருமணம், காதணி விழா போன்றவை நடத்துவதற்கும் மற்றும் அரசு சார்ந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் சமுதாய கூடகட்டிடம் கட்டும் பணி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் நான்கு பக்கமும் சுவர் மட்டும் எழுப்பியதோடு கட்டுமான பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதன் பின் பணிகள் இன்று வரை தொடங்கப்படாமல் இருக்கிறது.

தற்போது இந்த கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடையாமல் பாதியில் நிற்கும் கட்டிடத்தை சுற்றிலும் அடர்ந்த காடுகள் போல புதர் மண்டி கிடக்கிறது. இதனால் இரவு மற்றும் பகல் நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி உள்ளது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிட பணி முடிக்கப்படாமல் இருப்பதால் அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டிடத்தை பார்வையிட்டு கட்டுமான பணிகளை தொடங்கி பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அந்த பகுதி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.