கட்டாய உறவு கொள்ளுதல் பெண்களின் மனநலனைப் பாதிக்குமா?

ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான சமூக ஒப்பந்தமே திருமணம் என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. கணவன் இழைக்கும் தீங்குகளை மனைவி தனது வாழ்க்கையின் ஒருபகுதியாக நினைத்து அதைச் சகித்துக்கொண்டு வாழப் பழகுகிறாள். பழக்கப்படுகிறாள்.

இந்தியாவில் திருமணம் என்பது மிகவும் புனிதப்படுத்தப்பட்ட உறவாக பார்க்கப்படுகிறது. ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர் தான் இங்கு அதிகம். குறிப்பாக இங்கு உறவுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு, சமூகத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது. ஒரு தாய் தன் மகளை திருமணமான முதல் நாளிலேயே அவளுடைய கணவனுக்கு பணிந்து நடக்கும்படி உபதேசம் செய்வது இந்திய சமூகத்தில் வாடிக்கையான ஒன்று. அவர்களுக்குள் ஏதேனும் சண்டைகள் வரும்போது அது கணவன், மனைவி சார்ந்த விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

கணவனுக்கு முக்கியத்துவம்:

இப்படியான சமூகம் தான் திருமண உறவில் கணவனுக்கு அதிக முக்கியத்துவத்தையும் அதிகாரத்தையும் கொடுத்துவிடுகிறது. இதனால், மனைவியைத் தாக்கவும், அவளுடைய விருப்பமின்றி உறவு கொள்ளவும் தனக்கு உரிமையுள்ளதாகவே கணவன் கருதுகிறான். இந்த 2020ஆம் ஆண்டிலும் திருமண உறவில் மனைவி மீது பாலியல் உறவு திணிக்கப்படுவது சட்டத்திற்கு விரோதமானது அல்ல என்றே சட்டம் தெரிவிக்கிறது.மனைவியாக இருந்தாலும் 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் உடலுறவு கொள்வது குற்றம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தாலும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவில் அதற்கான திருத்தம் செய்யப்படவில்லை.

மனைவியின் விருப்பம் கேட்பதில்லை:

இதுகுறித்து மனநல மருத்துவர் கூறுகையில், “நம்முடைய சமூகத்தில் ரொமான்ஸ், பாலியல் ரீதியான ஆசைகள் பெரும்பாலும் ஆண்களோடு தொடர்புடையவை. அதனால், பாலியல் தொடர்பான விஷயங்களில் தங்களுக்கு அனைத்து தகுதியும் உள்ளது என்ற எண்ணத்துடனேயே ஆண்கள் வளர்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு திருமணமானால்கூட பெரும்பாலும் மனைவியின் விருப்பத்தை கருத்தில் கொள்வதில்லை. உறவு கொள்ளும்போது மனைவியின் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்றவாறு நடந்து கொள்வதுமில்லை”என்றார்.

கட்டாய உறவு:

ஒருவேளை ஒரு பெண் தனது பாலியல் ஆசைகளை வெளிப்படுத்தினால் ஆண் அவளது நடத்தையை சந்தேகப்படுகிறான். அவளது பாலியல் ஆசைகளை வெளிப்படுத்தும் அந்தரங்கப் புரிதல்கூட ஆணுக்கு இருப்பதில்லை என்பதே நிதர்சனம். தேசிய குடும்ப நல வாரியத்தின் புள்ளிவிவரம் ஒன்று, பத்து பெண்களில் ஒருவர், கணவரால் வாழ்நாளில் ஒருமுறையேனும் கட்டாய உறவு உள்ளிட்ட பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார் எனத் தெரிவிக்கிறது.

குடும்ப வன்முறை:

ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான சமூக ஒப்பந்தமே திருமணம் என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. கணவன் இழைக்கும் தீங்குகளை மனைவி தனது வாழ்க்கையின் ஒருபகுதியாக நினைத்து அதைச் சகித்து வாழப் பழகுகிறாள். பழக்கப்படுகிறாள். ”இன்று கணவனை நீ பிரிய நேர்ந்தால் அது குழந்தையின் எதிர்காலத்தைப் பாதிக்கும்; நமது குடும்ப கவுரவத்தை நிலைகுலையச் செய்யும்” என்றே பெரும்பாலான பெற்றோர் குடும்ப வன்முறையை பெண்களின் மேல் திணிக்கின்றனர்.

கணவனின் உரிமை:

இந்நிலையில், மனைவியின் விருப்பமில்லாமல் கணவர் உடலுறவு வைத்துக் கொள்வதைக் கூட கணவரின் உரிமை என பெரும்பாலான பெண்கள் நம்பிவிடுகின்றனர். இதற்கு அவர்கள் வளர்க்கப்படும் முறையும் காரணமாக அமைகிறது. உண்மையில், திருமணம் என்பது உடலுறவு கொள்வதற்கான உரிமம் அல்ல என்பதை இருதரப்பினருக்கும் புரியவைக்க வேண்டியது கட்டாயமாகிறது. இதுபோன்ற கட்டாய உறவினால் பெண்களுக்கு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு, ஹார்மோன் தொடர்புடைய நோய்கள், மனநலம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன.

பெண்கள் மீது ஆண் ஆதிக்கம் :

இதைப்பற்றி மருத்துவர் கூறுகையில், “ஒரு ஆண் தன்னுடைய மேலாதிக்கத்தை மனைவியிடம் நிறுவ வன்முறையை வெளிப்படுத்துகிறார். தனது அதிகாரத்தின் வழியாக செய்யும் பாலியல் வன்முறைகளை மனைவிக்கு அளிக்கும் தண்டனையாக அவர் நினைக்கிறார்”என்றார். தொடர்ச்சியான வன்புணர்வு, உடல் மற்றும் மனரீதியான காயங்கள் பெண்களின் பாலியல் ஆசைகளைக் கடுமையாகப் பாதிக்கின்றன. இதனால் தனது கணவனிடமிருந்து அவள் முற்றிலும் விலகிவிடுகிறாள்.

கணவனுடனான உடல் ரீதியான நெருக்கத்திற்கு அவள் இசையாமல் இருக்கும்பட்சத்தில் மீண்டும் மீண்டும் அங்கு கட்டாயமான உறவு வைத்துக் கொள்ளப்படுகிறது. இது தாம்பத்யம் அல்ல பாலியல் வன்புணர்வுதான். “கணவன் தனது மனைவியை உணர்வு ரீதியாக அச்சுறுத்தி பாலியல் ரீதியான உணர்வுகளுக்கு இணங்கச் செய்கிறார். உடல் வலிமையால் துன்புறுத்துவதைவிட உணர்வு ரீதியான அச்சுறுத்தல் இன்னும் வீரியமாக பெண்ணுடைய மனதில் ஆழப்பதிந்துவிடுகிறது.

இவை மனரீதியாக ஏற்படுத்தும் குழப்பங்களும் அழுத்தங்களும் அவளை உள்ளூர உடையச் செய்கின்றன. இப்படி, மனைவியின் மீது தனது அதிகாரத்தை நிறுவும்போது ஆண் தன்னை உயர்ந்தவனாகவே கருதுகிறான்”என்கிறார் வீணா. மனைவியிடம் கட்டாய உறவு கொள்பவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறார் மருத்துவர். மேலும் அவர் கூறுகையில், “பெரும்பாலான பாலியல் வன்புணர்வு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மிகவும் பாதுகாப்பற்ற, தாழ்வு மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் தங்களது பாலியல் ஆசைகளை மனைவியிடம் நிறைவேற்றிக் கொள்ள முடியாதபோது அதனை தனிப்பட்ட தோல்வியாகக் கருதுகிறார்கள். இந்த மனநிலையை சரியானதல்ல. இப்படியானவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றுதான் கருத வேண்டியுள்ளது. பெண்கள் மீது அதிகாரம் செலுத்துவதையும் அவர்களைத் துன்புறுத்தவதையும் கண்டு வளர்பவர்களுக்கு இதில் தவறில்லை எனத் தோன்றும். இது பெண்களுக்கு நேருவது இயல்பு என அவர்கள் நினைக்கக் கூடும்”என்றார். கணவன் தன் மனைவியை அடித்துத் துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றம் எனக் கருதப்படுகிறது. ஆனால், அவளை மனதளவில் பலவீனமாக்கும் விருப்பத்துக்குப் புறம்பான உறவு கொள்தலைக் குறித்து சமூகமும் சட்டமும் அதிகம் பேசுவதில்லை.

வறுமை, அறியாமை மேலோங்கிய நம் இந்திய கட்டுப்பெட்டிச் சமூகத்தில், மத நம்பிக்கைகள் ஆழ வேரூன்றியிருக்கின்றன. எல்லா மதங்களும் ஆண்களை மையப்படுத்தியே உள்ளதால், அவற்றின் சிந்தனைகளும் ஆண்களுக்கு ஏற்றதாகவே உள்ளன. கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து என அனைத்து மதங்களும் பெண்களை ஆண்களுக்கு சேவை செய்யவே வலியுறுத்துகின்றன. பாலின சமத்துவத்தை பரவலாக்காமல் இது போன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது கடினமே. அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் மட்டுமே காலத்தின் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *