கோம்பையில் காட்டு யானைகள் அட்டகாசம்: வனத் துறையினர் திணறல்

கன்னிவாடி, கோம்பைப் பகுதியில் மூன்று ஏக்கர் தென்னை, வாழை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடிப் பகுதியின் மேற்குத்தொடர்ச்சி அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது கோம்பை. இந்தக் கோம்பைப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வந்து விவசாயிகளை பயமுறுத்திவருகிறது. அதே சமயத்தில் வனத் துறைக்கும் சவால்விட்டுவருகிறது. மேற்குத் தொடர்ச்சி அடிவாரப்பகுதிகளில் நீலமலைக்கோட்டை முதல் தருமத்துப்பட்டி அணைவரை இந்த யானைக் கூட்டம் உலாவருகிறது.

இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு கோம்பைப் பகுதியில் விவசாயி முருகன் என்பவரை இரவு நேரத்தில் யானை ஒன்று மிதித்துக் கொன்றது. இதனையடுத்து பொதுமக்கள், விவசாயிகள் மதுரை- ஒட்டன்சத்திரம் சாலையில் முருகனின் உடலை வைத்து யானைகளை உடனடியாக விரட்டியடிக்க வனத் துறையிடம் கோரிக்கைவைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை, வனத் துறையினர் யானைகளை விரட்டியடிப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தற்போது இந்தச் சம்பவத்திற்கு பிறகும் கடந்த ஒருவாரத்தில் 300 தென்னை, 200-க்கும் மேற்பட்ட வாழை, சோளப் பயிர்கள் என அனைத்தையும் யானைகள் நாசம் செய்துள்ளன. அதோடு மட்டுமில்லாமல் மூன்று ஏக்கர் பரப்பளவிலான தென்னை மரங்கள், இரண்டு ஆழ்துளைக் கிணறுகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் தொடர்ந்து அச்சமடைந்துள்ளனர்.

நிலங்களை இழந்துவாடும் விவசாயிகள் வனத் துறை போதிய நடவடிக்கை மேற்கொள்வதில் மெத்தனப்போக்கு காட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வனத் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இப்படியொரு நிகழ்வு வேதனையளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குற்றச்சாட்டு ஒருபக்கம் இருந்தாலும் யானைகளை விரட்டுவதில் வனத் துறையினர் திணறிவருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *